சென்னை ஐஐடி, ஐஐடி ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பின் கீழ் ‘மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையம்’ (Centre for Human-Centric Artificial Intelligence- CHAI) தொடங்கியுள்ளது. இந்த மையம் தொழில்நுட்ப மேம்பாடு, தொழில் முனைவோர் வளர்ச்சி, மனிதவள மேம்பாடு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு போன்ற பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்கிறது. செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு என்பது கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு இடையே முக்கிய கவலையாக மாறியுள்ளது. கட்டுப்பாடுகள் மற்றும் புதுமைகள் இடையே சமநிலையை ஏற்படுத்துவது அவசியமாகும்.இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டின் பாதுகாப்பு மற்றும் பொறுப்பான வளர்ச்சியை உறுதி செய்ய, எதிர்கால விதிமுறைகளை உருவாக்குவதில் உள்ள சிக்கல்களை அடையாளம் காண இந்த மையம் முக்கிய பங்கு வகிக்கிறது. இம்மையத்தின் தாய் அமைப்பான சென்னை ஐஐடி, உச்ச நீதிமன்றம், இந்திய நாடாளுமன்றம், மற்றும் இந்திய ராணுவம் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில் செயல்பட்டு வருகிறது. லெப்டினன்ட் ஜெனரல் கே.எஸ்.பிரார் AVSM, சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, சென்னை ஐஐடி பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் தலைமைச் செயல் அலுவலர் டாக்டர் எம்.ஜே.சங்கர் ராமன், CHAI தலைமை விஞ்ஞானி பேராசிரியர் கவுரவ் ரெய்னா மற்றும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், இதர தொடர்புடையோர் முன்னிலையில், இந்த மையம் நவம்பர் 14, 2024 அன்று தொடங்கப்பட்டது.இந்த புதிய மையம் மத்திய-மாநில அரசு நிறுவனங்கள், தொழில்துறை, ஸ்டார்ட்அப்கள் மற்றும் கல்வி ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து செயல்பட்டு, இந்தியாவில் மனித ஆற்றலை மேம்படுத்துவதற்கான தீர்வுகளை உருவாக்கும். இவ்வாறு உருவாக்கப்படும் தீர்வுகள், கற்றுக்கொண்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, பிற நாடுகளில் பயன்படுத்தப்படலாம்.இம்மையத்தின் நோக்கம் மூன்று முக்கிய பரிமாணங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மனித ஆற்றலை மேம்படுத்துதல், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மூலம் சமூக மதிப்புகளை வளர்த்தல் ஆகியவை இதற்குள் அடங்கும். ஐஐடி-எம் பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் என்பது சென்சார்கள், நெட்வொர்க்கிங், ஆக்சுவேட்டர்ஸ் மற்றும் கண்ட்ரோல் சிஸ்டம்ஸ் போன்ற தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை உள்ளடக்கிய ஒரு செக்சன்-8 நிறுவனமாகும், இது இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் ஆதரிக்கப்படுகிறது.

