வியட்நாம் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மனித ரோபோக்களை ரோந்து பணிக்கு பயன்படுத்த சீனா முடிவு செய்துள்ளது. இதற்காக சீனாவின் சென்ஜென் மாகாணத்தில் செயல்பட்டு வரும் யுபிடெக் ரோபோட்டிக்ஸ் (UBTECH Robotics) நிறுவனத்துடன் சீன அரசு முக்கிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
தொழில்சாலைகள் மற்றும் பொதுச் சேவைகளுக்காக மனித வடிவ ரோபோக்களை உருவாக்கி வழங்குவதில் யுபிடெக் நிறுவனம் உலகளவில் பெயர் பெற்றது. இந்த நிலையில், எல்லைப் பாதுகாப்பு பணிகளுக்காக ‘வாக்கர் எஸ்2’ (Walker S2) என்ற மனித ரோபோக்களை தயாரித்து வழங்க 37 மில்லியன் டாலர் மதிப்பில் சீன அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் வகையில் இந்த மனித ரோபோக்களை யுபிடெக் நிறுவனத்தின் இன்ஜினீயர்கள் வடிவமைத்து உருவாக்கியுள்ளனர். இந்த ரோபோக்களை வியட்நாம் எல்லைக்கு அருகிலுள்ள குவாங்சி மாகாணத்தின் ஃபேங்செங்காங் (Fangchenggang) எனும் கடலோர பகுதியில் ரோந்து பணிக்காக சீனா பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்த மனித ரோபோக்கள் எல்லைப் பகுதிகளில் பயணிகளை ஒழுங்காக வரிசையில் நிற்க வைப்பது, பொதுமக்கள் கேட்கும் எளிய கேள்விகளுக்கு பதிலளிப்பது, வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு உதவியாகவும் இந்த ரோபோக்கள் செயல்படும் என்றும் கூறப்படுகிறது.
மனித வளத்தின் சுமையை குறைத்து, நவீன தொழில்நுட்பத்தை பாதுகாப்பு துறையில் முழுமையாகப் பயன்படுத்தும் முயற்சியாக சீனாவின் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

