கங்குலியின் தனித்துவமான இடது கை பேட்டிங் ஸ்டைல் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கும். அதனை மேட்ச்சிங் செய்வதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ஹீரோ.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ‘கொல்கத்தாவின் இளவரசன்’ என்று அழைக்கப்படுபவருமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சவுரவ் கங்குலியின் செல்லப் பெயரான ‘டாடா’ (DADA) என்றே இந்தத் திரைப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்பு ஏப்ரல் 1, 2026 அன்று கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தொடங்கியுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
படக்குழுவினர் அங்குள்ள ‘சவுரவ் கங்குலி ஸ்டாண்ட்’ மற்றும் படத்தின் ‘கிளாப் போர்டு’ ஆகியவற்றின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
கங்குலியின் கேரக்டரில் நடிக்க பாலிவுட்டின் திறமையான நடிகர்களில் ஒருவராக கருதப்படும் ராஜ்குமார் ராவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்காக அவர் கடந்த சில மாதங்களாகத் தீவிர உடற்பயிற்சி மற்றும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தப் படம் கங்குலியின் சிறுவயது வாழ்க்கை, இந்திய அணியில் அவர் நுழைந்த விதம், 2000-ம் ஆண்டுகளில் நிலவிய சூதாட்டப் புகார்களுக்குப் பிறகு இந்திய அணியை அவர் ஒரு கட்டுக்கோப்பான மற்றும் ஆக்ரோஷமான அணியாக மாற்றிய விதம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு அமையவுள்ளது.

