செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு தகவல்களை வெளியிட்டுள்ளார் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை மீது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் தமிழக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 14 ம்தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுக அமைச்சர்கள் ஊழல் செய்து சொத்துக்கள் குவித்துள்ளதாக வீடியோ காட்சிகளுடன் செய்தி வெளியிட்டிருந்தார். இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பை ஏராளமான தொலைக்காட்சிகள், இணையதளங்கள் நேரலை செய்திருந்தனர்.
எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் முதலமைச்சருக்கு எதிராக கருத்துக்கள் வெளியிட்டதாக கூறி அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் முக ஸ்டாலின் சார்பில் மாநகர அரசு தலைமை வழக்கறிஞர் தேவராஜன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்
அதில், தமிழகத்தில் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தி மக்களின் ஆதரவை முதலமைச்சர் பெறுவதை ஏற்று கொள்ள முடியாமல் இது போன்று அவதூறு கருத்துக்களை வெளியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை மீது அவதூறு சட்டத்தின் கீழ் உரிய தண்டனை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.
அதில், முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய குடும்பத்தினருடன் துபாய் சென்ற போது அங்குள்ள நிறுவனங்களில் முதலீடு செய்ததாகவும், தேர்தலின் போது அந்த நிறுவனங்களின் மூலமாக போது பணம் பரிமாற்றம் நடத்தப்பட்டது என பல்வேறு குற்றச்சாட்டுகளை அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.
இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர், மனு மீதான விசாரணை 8 வாரத்துக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.