நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் ஆளுநரைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் வரும் 20ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக நீட் தேர்வு உருவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு வருவதாகவும், நம் மாணவச் செல்வங்களின் மரணம் ஆளுநரையோ, அவரை இங்கு அனுப்பியுள்ள ஆரிய மாடல் ஆட்களையோ துளியும் பாதிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் மரணங்கள் அனைத்திற்கும் மத்திய பாஜக அரசும், அதிமுகவும், நீட் பாதுகாவலர் ஆளுநர் ஆர்.என்.ரவியுமே காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.மாணவர் மட்டுமன்றி, அவர்களின் பெற்றோரையும் மரணக் குழியில் தள்ளும் நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசையும், பொறுப்பற்ற ஆளுரையும் கண்டித்து வரும் 20ஆம் தேதி திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி சார்பாக மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.