அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். தற்போது அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பிரசாரம் தீவிரமாகி வருகிறது. இரு தலைவர்களும் தொடர்ந்து தீவிரமாக பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் நேரடியாக விவாதம் ஒன்றில் பங்கேற்றனர். அதனையடுத்து தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் களம் மாறியுள்ளதாக கூறப்படுகிறது. முதலில் டொனால்ட் டிரம்புக்கு அதிக ஆதரவு இருந்ததாகவும் தற்போது கமலா ஹாரிசுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளதாக தெரியவருகிறது. சமீபத்திய கருத்து கணிப்புகளில் டொனால்ட் டிரம்ப் கமலா ஹாரிஸை விட பின்தங்கி உள்ளார் என ஊடகங்கள் கூறுகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரின் ஓட்டுகளை குறிவைத்து டொனால்ட் டிரம்ப் அடுத்த வாரம் பிரதமர் மோடியை நேரில் சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மிசிகன் நகரில் சமீபத்தில் நடந்த பிரசாரத்தின் போது டிரம்ப் கலந்துகொண்டார். அப்போது அவர் அமெரிக்காவிற்க்கு அடுத்த வாரம் வரும் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளேன் என்றும் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான வர்த்தகம் பற்றி பேச உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை டிரம்ப் சந்திப்பது அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளியினர் மத்தியில் டிரம்ப்பின் செல்வாக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என்பதால் தான் டொனால்ட் டிரம்ப் இந்த சந்திப்பை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக சர்வதேச அரசியல் ஆலோசகர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துக்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி – டொனால்ட் டிரம்ப் சந்திப்பு பற்றி இதுவரை எந்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியாகவில்லை. அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தலைமையில் டெலாவோ் மாகாணத்தில் உள்ள வில்மிங்டனில் செப்டம்பா் 21-ஆம் தேதி நடைபெறும் 4-ஆவது க்வாட் தலைவா்கள் வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமா் மோடி கலந்து கொள்கிறாா். இதற்காக, அமெரிக்காவுக்கு மூன்று நாள் அரசு முறைப் பயணத்தை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (செப்டம்பா் 21) அன்று தொடங்க உள்ளார் . அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி வகித்த காலகட்டத்தில் மோடியுடன் நெருங்கிய நட்பைப் பகிர்ந்து கொண்டார்.ஆனால், இந்த சந்திப்பானது எப்போது, எங்கே நடைபெறும் என்பது குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை. வருகின்ற நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மோடியை குடியரசுக் கட்சி வேட்பாளரான டிரம்பை சந்திக்கவுள்ளதாக அறிவித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.