தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அரசு அலுவலகங்களில் இருந்த முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் மறைந்த தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டன. மேலும், பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்த காமராஜர், அண்ணா, பெரியார், எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளும் மூடப்பட்டன.இந்த நிலையில், அரசியல் கட்சிகளுடன் நடைபெற்ற ஆலோசனையில் சிலைகளை மறைக்க வேண்டாம் என்று பல கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதனை தொடர்ந்து, மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைப்பது தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே மூடப்பட்டுள்ள சிலைகளின் மறைப்புகளை உடனடியாக அகற்றுமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

