ஜம்மு – காஷ்மீரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே திடீரென மயங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜஸ்ரோட்டா பகுதியில் காங்கிரஸ் சார்பில் இந்த கூட்டம் நடைபெற்றது. மேடையில் உரையாற்றும் போது, அவர் திடீரென மயக்கம் அடைந்தார், இதனால் அங்கு உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் உடனே அவரை பிடித்து தாங்கினர். பின்னர், அவர் அமர்வதற்காக இருக்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கார்கேவின் மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தகவலின் அடிப்படையில், “ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ஜஸ்ரோட்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரது மருத்துவக் குழுவினர் அவரை பரிசோதித்துள்ளனர். குறைந்த ரத்த அழுத்தம் தவிர, அவர் நலமாக உள்ளார். அவரது உறுதியும், மக்களின் நன்மதிப்பும் அவரை வலுவாக வைத்திருக்கின்றன” என குறிப்பிட்டுள்ளார்.
