காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலமானார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று காலை 10.12 மணிக்கு அவரது மறைவு தகவலை வெளியிட்டது. கடந்த மாதம் 11ம் தேதி காய்ச்சல் காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நுரையீரல் சார்ந்த பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தார், ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய இழப்பு எனக் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியினர் அவரை தன்மானத் தலைவர் எனக் குறிப்பிடுவார்கள். ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும், பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு நாளை அவரின் உடல் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1948 டிசம்பர் 21ஆம் தேதி அரசியல் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஈரோட்டில் தனது பள்ளி கல்வியை முடித்த பிறகு, சென்னை மாநிலக் கல்லூரியில் பொருளாதாரம் துறையில் பி.ஏ. பட்டம் பெற்றார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகராக இருந்த இவர், அரசியல் வாழ்க்கையில் அவரை அரசியல் குருவாக ஏற்றார்.1984 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். 1984 முதல் 1987 வரை அவர் சத்தியமங்கலம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். 2004 ஆம் ஆண்டில் கோபிச்செட்டிபாளையம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், ஒன்றிய அமைச்சராக பதவி வகித்தார்.2000 முதல் 2002 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், 2014 முதல் 2017 வரை மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பணியாற்றினார். 2002-2003 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராகவும் அவர் இருந்தார். 2023 பிப்ரவரியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு, 39 ஆண்டுகளுக்குப் பிறகு 2வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இளங்கோவன் மறைவிற்கு பல அரசியல் தலைவர்கள் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் உடல் நாளை தகுணம் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

