உபெர் (Uber) என்பது இந்தியாவில் முன்னணி ஆன்லைன் டாக்ஸி சேவையாக விளங்குகிறது. இது கார் டாக்ஸி, ஆட்டோ டாக்ஸி மற்றும் பைக் டாக்ஸி போன்ற பல்வேறு சேவைகளை நாடு முழுவதும் வழங்குகிறது. இந்நிலையில், ‘உபெர் மோட்டோ வுமன்’ (Uber Moto Women) என்ற புதிய சேவையை உபெர் அறிமுகப்படுத்தியுள்ளது, இது பெண் பயணிகளின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த சேவை பெங்களூரில் மட்டுமே செயல்படுகிறது. மொபைல் போன் மற்றும் இணையத்தின் வளர்ச்சி மூலம் வணிகத்தில் முக்கிய முன்னேற்றங்களை அடைந்த நிறுவனங்களில் உபெர் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. இந்தியாவில் டாக்ஸி சேவைக்கு அதிகமான ஆதரவும் தேவைவும் இருப்பதுடன், சிலர் இதற்கு எதிராகவும் கருத்து தெரிவிக்கிறார்கள். பைக் டாக்ஸிகளை எதிர்ப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் ஆகும். இரவு நேரங்களில் இந்த சேவையை பயன்படுத்தும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததாக சில மாநில அரசுகள் பைக் டாக்ஸிக்கு தடை விதித்துள்ளன. சில ரைடர்கள் பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இக்குற்றச்சாட்டுகளை தடுக்கும் நோக்கில், உபெர் நிறுவனம் பெண்களால் வழங்கப்படும் பைக் டாக்ஸி சேவையை “உபெர் மோட்டோ வுமன்” என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சேவையின் முக்கிய அம்சம், பெண்கள் பயணிகளுடன் பெண்கள் ரைடர்களை இணைப்பதாகும். ரைடர்கள் மற்றும் பயணிகளிடம் இருந்து கிடைத்த கருத்துகளுக்கு ஏற்ப முழுக்க முழுக்க பெண்களுக்கு பாதுகாப்பான பயணத்தையும், வருமானத்தையும் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய உபெர் மோட்டோ வுமன் சேவை தற்போதைக்கு பெங்களூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது