பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரியா விடை; நேரு, வாஜ்பாய், மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தின் பெருமை; பிரதமர் மோடி பெருமிதம்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

நேரு, வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோர் நாடாளுமன்றத்துக்கு பெருமை சேர்த்ததாக மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று முதல் வரும் 22-ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கு பாரத் என பெயர் மாற்றும் மசோதாவும், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவும் கொண்டு வரப்படவுள்ளன என்பன போன்ற யூகங்களுக்கு இடையே இன்று நாடாளுமன்றம் கூடுகிறது. ஆனால், அரசியல் நிர்ணய சபை தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் குறித்து இந்த சிறப்புக் கூட்டத் தொடரில் விவாதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கும் முன், செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக் கூடியதாக அமையும். அனைத்து உறுப்பினர்களும் சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “தேசத்தின் வளர்ச்சிப் பணியில் நாட்டு மக்கள் தொடர்ந்து வியர்வை சிந்தி வருகின்றனர். சுதந்திர போராட்டத்தின் சின்னமாக பழைய நாடாளுமன்றம் திகழ்கிறது. சுதந்திர இந்தியாவின் பல்வேறு பாரம்பரியங்களின் நினைவாக பழைய நாடாளுமன்றம் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு நாம் விடை கொடுக்க உள்ளோம். புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு சென்றாலும், இந்த கட்டடமும் நாட்டின் வளர்ச்சிக்காக செயல்படும். இந்திய நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால செயல்பாடுகள் குறித்து பெருமிதம் கொள்கிறேன்.”என்றார்.
பாராளுமன்றத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இது கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. ஒருவகையில், இது ஜனநாயகத்தின் தாய் மீது, நம் உயிருள்ள ஆன்மா மீது நடத்தப்பட்ட தாக்குதல். அந்தச் சம்பவத்தை ஒருபோதும் மறக்க முடியாது. பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போரிடும் போது, ​​நாடாளுமன்றத்தையும் அதன் அனைத்து உறுப்பினர்களையும் காக்க நெஞ்சில் குண்டுகளை வாங்கியோர் முன் தலைவணங்குகிறேன்.” என்றார்
தொடர்ந்து அவர் பேசுகையில்”இந்தியா முழுவதும் மாற்றத்திற்கான அலை உருவாகியுள்ளது. G20 மாநாட்டின் வெற்றி இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் சொந்தம். நாம் முன் வைத்த பிரகடனத்தை G20 நாடுகள் ஏற்றுக்கொண்டது இந்தியாவின் பலத்தை காட்டுகிறது. இந்தியாவின் வளர்ச்சியை கண்டு உலக நாடுகள் வியக்கின்றன. மேலும் சுய தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா மாறி வருகிறது. இந்தியாவில் நடைபெற்ற G20 மாநாட்டில் ஆப்பிரிக்க ஒன்றியம் இணைக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்கது.” என்றும் அவர் பேசினார்.
நேரு, வாஜ்பாய், மன்மோகன் சிங் போன்றோர் நாடாளுமன்றத்துக்கு பெருமை சேர்த்துள்ளதாக தெரிவித்த அவர் மன்மோகன் சிங் ஆட்சியில் வாக்குக்கு பணம் பெறப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.