விநாயகர் சதுர்த்தி விழா தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பக்தர்கள் கோயில்களில் சிறப்பு தரிசனம் மேற்கொள்கின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி திருக்கோவிலில் உச்சியில் அமைந்திருக்கும் உச்சிப் பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை, மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு 75 கிலோ கொழுக்கட்டை என மொத்தம் 150 கிலோ கொழுக்கட்டை இன்று காலை படையல் இடப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை முதலே மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரை தரிசனம் செய்வதற்காக நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
சேலத்தில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோயிலில் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது.
சென்னை தியாகபாய நகர், சி.ஐ.டி நகரில், ஆண்டு தோறும் உணவு பொருட்களில் இருந்து விநாயகர் சிலை செய்வது வழக்கம். இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் 208 கிலோ மைசூர்பாக்கை கொண்டு விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னை கொளத்தூர், பூம்புகார் நகர் சந்திப்பு ஏரிக்கரை பகுதியில் ஒரு டன் எடை கொண்ட வெட்டி வேர் மாலையால் 42 அடி உயரத்தில் “வெட்டி வேர் விநாயகர்” உருவாக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் ஏலேல சிங்க விநாயகருக்கு ரூ.15 லட்சம் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது
