சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் இடையே போக்குவரத்து சேவை முடக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை இன்று அதிகாலை ஆந்திர மாநில குற்றப்பிரிவு போலீசார் கைது செய்ததை தொடர்ந்து அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதை தொடர்ந்து ஆந்திராவுக்கு தமிழ்நாடு,கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்து செல்ல வேண்டிய பேருந்துகள் மாநில எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டிலிருந்து இன்று காலை முதல் வேலூர், சென்னை ஆகிய ஊர்களில் இருந்து 27 பேருந்துகள் வந்து சேர வேண்டிய நிலையில் அவற்றில் 24 பேருந்துகள் மட்டும் வந்து சேர்ந்துள்ளன. ஒரு பேருந்து ரேணிகுண்டாவில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மற்றொரு பேருந்து திருத்தணியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு செல்ல வேண்டிய 16 பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பதியில் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் டயர்களை போட்டு எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தெலுங்கு தேச கட்சி தொண்டர்கள். தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் அவர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.