முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் திரும்பிய நிலையில், பல்லாயிரக்கணக்கனோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக பிரிட்டன் சென்ற அவர், பிறகு பாகிஸ்தான் திரும்பவில்லை. தற்போது பாகிஸ்தான் அரசின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, விமானம் மூலம் இஸ்லாமாபாத் வந்தடைந்தார். விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள் வரவேற்பை ஏற்ற நவாஸ் ஷெரீப், கட்சியினரின் பிரமாண்ட வரவேற்பு பேரணியில் பங்கேற்றார்.
பஞ்சாப் மாநிலத்தின் லாகூரில் உள்ள புகழ்பெற்ற மினாா்-இ-பாகிஸ்தான் கோபுரப் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய நவாஸ் ஷெரீஃப் கூறியதாவது. ”யாரையும் பழிவாங்க விரும்பவில்லை. நான் விரும்புவது மக்கள் நலன் மட்டுமே. கடந்த 1990-ம் ஆண்டில் என்னுடைய ஆட்சியில் பின்பற்றிய பொருளாதாரத் திட்டத்தைப் பின்பற்றிருந்தால், நாட்டில் எந்தவொரு நபரும் வேலைவாய்ப்பின்றி துயரப்படும் நிலையும் வறுமைச் சூழலும் ஏற்பட்டிருக்காது. ஆனால், இன்று நிலைமை மோசமாகியுள்ளது. இதற்காகவா நீங்கள் என்னை வெளியேற்றினீர்கள்? நாம் புதிய பயணத்தைத் தொடங்க வேண்டும். நாம் இழந்த இடத்தை எவ்வாறு திரும்பப் பெறுவது, வலுவான வெளியுறவுக் கொள்கையை எவ்வாறு உருவாக்குவது, காஷ்மீா் பிரச்னைக்குத் தீர்வு உள்பட உலக நாடுகளுடன் நல்ல உறவை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். நம்முடைய அண்டை நாட்டுடன் சண்டையிட்டுக் கொண்டு நம்மால் முன்னேற முடியாது. செயல்திறன்மிக்க வெளியுறவுக் கொள்கையை நாம் அறிமுகப்படுத்த வேண்டும். அண்டை நாடுகளின் நட்புறவின்றி நம்முடைய நாட்டை முன்னேற்ற முடியாது’ என்று தெரிவித்தார்.