பிரபல சமூக ஊடகமான ‘எக்ஸ்’ (முன்னர் ட்விட்டர்) தளம் இன்று உலகம் முழுவதும் தொழில்நுட்பக் கோளாறுகளை சந்தித்தது. இதனால் பல நாடுகளில் பயனர்கள் தளத்தை பயன்படுத்த முடியாமல் சிரமம் அடைந்தனர்.இணையதள செயல்பாடுகளை கண்காணிக்கும் ‘டவுன்டிடெக்டர்’ அமைப்பின் தகவலின்படி, ஜனவரி 13-ஆம் தேதி மாலை சுமார் 7.49 மணியளவில் எக்ஸ் தளத்தில் பிரச்சினைகள் தொடங்கின. இந்தியாவில் மட்டும் குறுகிய நேரத்தில் 1,869-க்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டன.இந்த கோளாறால் எக்ஸ் செயலியை பயன்படுத்திய பயனர்களில் 49 சதவீதத்தினரும், கணினி மூலம் இணையதளத்தை பயன்படுத்திய 40 சதவீதத்தினரும் பாதிக்கப்பட்டனர். மேலும், 11 சதவீத பயனர்கள் சர்வர் இணைப்புச் சிக்கல்களை எதிர்கொண்டனர். இதனால் புதிய பதிவுகளை இடுவதிலும், செய்திகளைப் பகிர்வதிலும் தாமதம் ஏற்பட்டது.இந்த பாதிப்பு இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளிலும் ஏற்பட்டது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 24,000-க்கும் மேற்பட்டோர் எக்ஸ் தளம் முடங்கியதாக புகார் தெரிவித்தனர். இதுகுறித்து எக்ஸ் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை. இருப்பினும், தற்போது சேவைகள் மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

