அரியானா மாநிலத்தில் 5 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. அரியானாவின் நுஹ் மாவட்டத்தில் கடந்த 31ம் தேதி விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் நடத்திய யாத்திரையின் போது மற்றொரு தரப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பெரும் வன்முறை வெடித்தது.போலீஸ் வாகனங்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் எரித்து சூறையாடப்பட்டன. மணிப்பூரில் 3 மாதமாக இரு இனமக்கள் இடையே வன்முறை நீடிக்கும் நிலையில், அரியானாவில் ஏற்பட்ட வன்முறை நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர, ஆளும் பாஜ அரசு பாதுகாப்பை பலப்படுத்தியது. அரியானா போலீசாரைத் தவிர 20 கம்பெனி ஒன்றிய பாதுகாப்பு படையினர் வன்முறை பாதித்த பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தில் 5 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. நுஹ், பரிதாபாத் மற்றும் பல்வால் மாவட்டங்கள் மற்றும் குருகிராமின் துணைப் பிரிவுகளில் ஆகஸ்ட் 5 வரை இணைய சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது.