நாட்டின் பல மாநிலங்களுக்கு வெப்பக்காற்று எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது கோடைக்காலம் உச்சம்தொட ஆரம்பித்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்கள் தீவிர வெயிலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன. முற்பகல் 11 மணியில் இருந்து நண்பகல் 3 மணிவரை வெயிலின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்பதால், இந்த நேரத்தில் வெளியே செல்வதை முடிந்தால் தவிர்க்க வேண்டும், அல்லது உரிய முன்னேற்பாடுகளுடன் செல்ல வேண்டும் என மக்களுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் பல மாநிலங்களுக்கு வெப்ப காற்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, அடுத்த 4-5 நாள்களுக்கு மேற்கு வங்கம், பீகார், கடலோர ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப காற்று பாதிப்பு ஏற்படும். மேலும் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் அடுத்த இரு நாள்களுக்கு வெப்ப காற்று வீசும்.
எனவே, மேற்கண்ட மாநிலங்களில் அடுத்த சில நாள்களில் வெப்பநிலை உச்சம் தொடும் என்பதால் ஆரெஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.