மணிப்பூரில் இரு பெண்கள் நிர்வாணப்படுத்தி இழுத்து செல்லப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலை 20-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்தக்கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம், மத்திய அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துவது உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. இதனிடையே மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயார் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதல் இருந்தே மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றன. இதனால் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய கூட்டத்தொடரில் இதுவரை எந்த ஒரு முக்கியமான அலுவலும் நடத்த இயலாமல் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.
பிரதமர் மோடி பதிலளிக்க வலியுறுத்தி தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மோடியின் பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளன. இதனைதொடர்ந்து இன்று கூடிய மக்களவை கூட்டத்தில் மணிப்பூர் பிரச்னையை விவாதிக்க கோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் அவை 6-வது நாளாக முடங்கியது.
இந்நிலையில் மணிப்பூரில் இரு பெண்கள் நிர்வாணப்படுத்தி இழுத்து செல்லப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வழக்கை மணிப்பூரில் இருந்து வெளியே நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
