உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 49.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 199 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 10 ஓவர்கள் வீசி 28 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குல்தீப் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களம் புகுந்த இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினர். 2 ரன்னில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தது.
இதைடுத்து இணைந்த கே.எல்.ராகுல் – விராட் கோலி இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை எடுத்தனர். 41.2 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது.

