கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பிரபல motovlogger-ரான இவருக்கு, ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்ததைப் போலவே புகார்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இவரது பைக் ரேஸ் வீடியோக்கள் இளைஞர்களை ஆபத்தான பைக் சாகசங்களுக்கு தூண்டுவதாகவும், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை இவர் தவறாக வழிநடத்துவதாகவும் பல்வேறு தரப்புகளிலிருந்து தொடர் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. சர்ச்சைக்குரிய வீடியோ பேச்சுகள், ஆபத்தான பயணம் உள்ளிட்ட காரணங்களால் பல முறை காவல் நிலையம் ஏறி இறங்கிய டிடிஎஃப் வாசன், தற்போது மஞ்சள் வீரன் என்ற படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார்.
இதனிடையே சில வாரங்களுக்கு முன்பு, காஞ்சிபுரம் அருகே விபத்திலும் சிக்கினார். பைக்கில் அதி வேகமாக சென்று, பைக்கின் முன் சக்கரத்தை அந்தரத்தில் தூக்கி வீலிங் செய்ய முற்பட்டபோது பைக் அவரை ரோலிங் செய்து கீழே தள்ளியது. நிலைதடுமாறி சாலையோரம் விழுந்த அவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட டிடிஎஃப் வாசன், ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். டிடிஎஃப் வாசன் மீது பல்வேறு பகுதிகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பத்தாண்டுகளுக்கு அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது, 2033ஆம் ஆண்டு வரை அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
