சர்வதேச 11 ஆவது யோகா தினம், ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்துக்கான யோகா’ என்ற கருப்பொருளுடன் இன்று கொண்டாடப்பட்டது. இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.கே. கடற்கரையில் இருந்து போகாபுரம் வரை 26 கி.மீ. தொலைவிலான சாலையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 3.19 லட்சம் பேர் கலந்துகொண்டு யோக பயிற்சிகளை மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி கூறியதாவது: 11 ஆவது சர்வதேச யோகா தினத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். உலகம் முழுவதையும் யோகா இணைத்துள்ளது. உலகம் முழுவதும் சில பதற்றங்கள் மற்றும் அமைதியற்ற நிலை அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற யோகா அமைதிக்கான வழியை நமக்குத் தரும். மனதை ஆசுவாசப்படுத்தவும், சமாதானப்படுத்தவும் உதவும். உலகம் முழுவதையும் யோகா ஒன்றிணைத்து ஒற்றுமையை நோக்கி நம்மை வழி நடத்துகிறது. யோகா என்பது நாகரீகம், பின்னணி, எல்லை, வயதிற்கு அப்பாற்பட்டது. அனைவருக்கும் யோகா ஏற்றதாகும். நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் அடைவதற்கு யோகா ஒரு நாகரீகமாகும்.தனிப்பட்ட ஒழுக்கம், நான் என்பதில் இருந்து நாம் என்று அழைத்துச் செல்லும் ஒரு அமைப்பு யோகா. மனிதகுலம் முழுமையடைய சுவாசிக்க, சமநிலைப்படுத்த தேவையான ஒரு பட்டன் தான் யோகா என கூறியுள்ளார்.

