போப் பிரான்சிஸ் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்தியாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88) வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று வாடிகனில் காலமானார். போப் பிரான்சிஸ் மறைவு, உலகளாவிய கத்தோலிக்க கிறிஸ்தவர்களிடையே மிகுந்த துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜென்டினாவைச் சேர்ந்த ஜார்ஜ் மரியோ பெர்கோகிலோ என்ற பெயரால் அறியப்படும் போப் பிரான்சிஸ், 2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி 266வது போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சமத்துவ கொள்கைகளில் உறுதியாக இருந்த போப் பிரான்சிஸ், போர் இல்லாத அமைதியான உலகுக்காக தொடர்ந்து தனது குரலை எழுப்பி வந்தார்.போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இதற்கிடையில், போப் பிரான்சிஸின் மறைவை மதித்து, ஒன்றிய அரசு மூன்று நாள் தேசிய துக்கத்தை அறிவித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.மேலும் போப் அவர்களின் இறுதிச் சடங்கு நடைபெறும் நாளிலும் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும்’ எனவும், மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்க உள்ளதால், இந்தக் காலகட்டத்தில் நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். இந்த நாட்களில் எந்தவொரு அதிகாரப்பூர்வ அரசு நிகழ்ச்சிகளும் நடத்தப்படாது.
