காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் எதிரொலி: வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறவும் ஆணை

அரசியல் இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் சுற்றுலா செய்திகள் நிகழ்வுகள் பாகிஸ்தான் மற்றவை முதன்மை செய்தி

ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத்தலமான பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது ஈவு இரக்கமே இல்லாமல் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தக் கொடூரத் தாக்குதலில் வெளிநாட்டினர் 2 பேர் உள்ளிட்ட 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கோரத் தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த அதிகாரி, ஐதராபாத் உளவுப் பிரிவு அதிகாரி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.
மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பரமேஸ்வரம், சந்துரு, பாலச்சந்திரா ஆகிய 3 பேர் காயமடைந்தனர். இதேபோல, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களைச் சேர்ந்த 9க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ சீருடை அணிந்து வந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாகக் கொண்ட தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது. தீவிரவாதத் தாக்குதலை அடுத்து, பிரதமரின் அறிவுரைப்படி, ஜம்மு காஷ்மீர் விரைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தார். மேலும், காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதலமைச்சர் உமர் அப்துல்லா உள்ளிட்டோருடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது நடந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீநகருக்கு சென்ற அவர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் அன்புக்குரியவர்களை இழந்த வலியை ஒவ்வொரு இந்தியரும் உணர்கிறார்கள். இந்த துயரத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. அப்பாவி மக்களைக் கொன்ற இந்த பயங்கரவாதிகள் எந்த சூழ்நிலையிலும் தப்பவிடப்பட மாட்டார்கள் என்பதை பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும், முழு நாட்டிற்கும் உறுதியளிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து டெல்லி வந்த அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
அமைச்சரவைக் கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது, “இந்தியா – பாகிஸ்தான் இடையேயான வாகா எல்லை மூடப்படும். பாகிஸ்தானியர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சார்க் விசா ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விசா மூலம் பாகிஸ்தான் மக்கள் இந்தியா வர தடை. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற உத்தரவு.
பாகிஸ்தான் அதிகாரிகள் ஒரு வாரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற ஆணை. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 30 ஆக குறைப்பு. சிந்து நதி ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு. பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து செய்யப்படும். நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும். பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் தேடி கண்டுபிடித்து தண்டனை கொடுக்கும் வரை ஓய மாட்டோம். பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்கள் மே 1ஆம் தேதிக்குள் இந்தியா திரும்ப வேண்டும்” என அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *