குறைந்த ஈர்ப்பு விசையில் தாவர வளர்ச்சியை ஆராய்வதற்காக இஸ்ரோவால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட காராமணி வெற்றிகரமாக முளைத்துள்ளது. இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., சி60 ராக்கெட், இரண்டு சிறிய செயற்கைக் கோள்களுடன், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் கடந்த டிசம்பர் 30ம் தேதி விண்ணில் பாய்ந்தது. தற்போது, பூமியில் இருந்து 500 கி.மீ. உயரத்தில் உள்ள வட்டப் பாதையில் இந்த செயற்கைக்கோள்கள் சுற்றி வருகின்றன. இதில், பி.ஓ.இ.எம்., 4 எனப்படும் சுற்றுவட்டப் பாதை பரிசோதனை அமைப்பில் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில், காராமணி எனப்படும் தட்டைப்பயிரின் எட்டு விதைகள் அனுப்பப்பட்டுள்ளன. அவை வளர்ந்து துளிர் விடும் நிலைக்கு அடைந்துள்ளன. இந்தியாவின் விண்வெளி உயிரியல் ஆராய்ச்சியில் இந்த சாதனை ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இந்த ஆராய்ச்சி, எதிர்காலத்தில் நீண்ட கால விண்வெளி பயணங்களில் பயன்படும் என நம்பப்படுகிறது. இஸ்ரோ, இதன் புகைப்படத்தை வெளியிட்டு, ‘விண்வெளியில் உயிர் துளிர்ந்துள்ளது. விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பி.ஓ.இ.எம்., மில் நடத்தப்பட்ட பரிசோதனை வெற்றியடைந்துள்ளது. நான்கு நாட்களில் விதை துளிர்ந்துள்ளது. மேலும் வளர்வதற்கான எதிர்பார்ப்பு உள்ளது’ என தெரிவித்துள்ளது.

