கீழடியில் நடைபெற்று வரும் 11ஆம் கட்ட அகழாய்வில், மீன் உருவம் பொறிக்கப்பட்ட பழமையான சுடுமண் பானை முழுமையாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு அடி விட்டமும், ஒரு அடி உயரமும் கொண்ட இந்த இரு நிற சுடுமண் பானையின் மேற்பகுதியில் மீன் உருவம் கோட்டு சித்திரமாக வரையப்பட்டுள்ளது.கீழடி அகழாய்வில் இதற்கு முன்பும் மீன் உருவம் பதிக்கப்பட்ட உறைகிணறு மற்றும் பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால், அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, கலைத்திறன் மற்றும் பண்பாட்டு அடையாளங்கள் குறித்து மேலும் பல தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள கீழடி, தமிழர்களின் பழமையான நகர நாகரிகம் மற்றும் வாழ்வியல் குறித்து அறிய முக்கியமான தொல்லியல் தளமாக விளங்கி வருகிறது. இங்கு தொடர்ந்து நடைபெறும் அகழாய்வுகள் மூலம் பழந்தமிழர்களின் வரலாறு மற்றும் பண்பாடு தொடர்பான புதிய ஆதாரங்கள் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

