அதிர்ச்சியில் மலையாள சினிமா உலகம்; பிரபல மலையாள நடிகர்கள் மீது பாலியல் புகார் அளித்த நடிகை

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

கேரள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், மணியன் பிள்ளை ராஜூ உட்பட 7 பேர் மீது மலையாள நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கேரளாவில் ஹேமா குழு அறிக்கை வெளியானதில் இருந்து, திரைப்பட நடிகர்கள் மீது நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். அந்த வரிசையில் மலையாளத்தில் பிரபல நடிகர்களான ஜெயசூர்யா, முகேஷ், மணியன் பிள்ளை ராஜூ உட்பட 7 பேர் மீது நடிகை ஒருவர் சமூக வலைதளம் வாயிலாக பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அதில், கடந்த 2008 ஆம் ஆண்டு தனது முதல் படமான “டேய் இங்கிட்டு நோக்கியோ” வின் படப்பிடிப்பு கேரளா தலைமைச் செயலகத்தில் நடைபெற்றதாகவும், அப்போது, தான் சேலையை சரி செய்து கொண்டிருந்த போது, நடிகர் ஜெயசூர்யா பின்னால் வந்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், திரைத்துறையில் சாதிக்க உதவுவதாக கூறி, திருவனந்தபுரத்தில் உள்ள தனது பங்காளவிற்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் ஜெயசூர்யா மீது புகார் அளித்துள்ளார். அவரது ஆசைக்கு தான் ஒத்துழைக்காத நிலையில், அதன் பிறகு ஜெயசூர்யா தன்னை தொடர்புக் கொள்ளவில்லை என்றும் புகாரளித்த நடிகை குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று மலையாள நடிகர்கள் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும் நடிகருமான எடவேலு பாபுவும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகர்கள் சங்கத்தில் இணைவதற்கு அவரை தொடர்பு கொண்ட போது, தனது இல்லத்திற்கு வருமாறு எடவேலு பாபு அழைப்பு விடுத்ததாக நடிகை கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில், அவரது இல்லத்திற்கு சென்று சங்கத்தில் இணைவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்த போது, பின்னால் இருந்த எடவேலு பாபு தனது கழுத்தில் முத்தமிட்டதாக நடிகை குற்றம்சாட்டியுள்ளார். தான் அங்கிருந்து உடனடியாக வெளியேறிய நிலையில், தற்போது வரை தன்னால் நடிகர்கள் சங்கத்தில் இணைய முடியவில்லை என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று, முகேஷ், மணியன் பிள்ளை ராஜூ, வழக்கறிஞர் சந்திரசேகரன், தயாரிப்பாளர்கள் நோபல் மற்றும் விச்சு ஆகியோர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நடிகர் மணியன் பிள்ளை ராஜூ, மிரட்டி பணம் பறிப்பதற்காக இது போன்ற பலர் வருவார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகையின் புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறு இழைத்தவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் மணியன் பிள்ளை ராஜூ கூறியுள்ளார். இந்நிலையில், மலையாள நடிகர் சித்திக் மீதான பாலியல் புகாருக்கு ஆதாரம் இருப்பதாக நடிகை ரேவதி சம்பத் தெரிவித்துள்ளார். ரேவதி சம்பத்துக்கு எதிராக காவல் துறையில் நடிகர் சித்திக் புகார் அளித்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த ரேவதி சம்பத், திருவனந்தபுரத்தில் ஓட்டலில் சந்திக்க வருமாறு வாட்ஸ்அப் மூலம் செய்தி அனுப்பியிருந்தார் என்று குறிப்பிட்டார். ஓட்டலுக்கு சென்றபோது, சித்திக் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், இதற்கு முன்னதாக, தாங்கள் இருவரும் முகநூல் மூலம் உரையாடியிருப்பதாகவும் ரேவதி சம்பத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *