கேரளாவில் பரவும் எலி காய்ச்சலால் மக்கள் அவதி .கேரளாவில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்களிடையே அச்சம் உருவாகியுள்ளது. அசுத்தமான நீரில் உள்ள லெப்டோஸ்பைரா என்ற நுண்ணுயிர் உள்ளது , அந்த தண்ணீரை குடிக்கும் போது உடலில் நோய் தொற்று ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் எலிகளின் எச்சில் மற்றும் சிறுநீர் மூலம் மனிதர்களுக்கு லெப்டோஸ்பைரோசிஸ் என்ற காய்ச்சல் பரவுகிறது . இந்த காய்ச்சலுக்கு எலிக்காய்ச்சல் எனும் பெயர் வழங்கப்பட்டுள்ளது, தற்போது இது கேரளாவை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. கேரள சுகாதாரத்துறையின் தகவலின்படி, 2024ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை 2,512 பேர் லெப்டோஸ்பைரோசிஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர், இதில் 155 பேர் எலிக்காய்ச்சலால் அதிகாரப்பூர்வமாக உயிரிழந்துள்ளனர். பாக்டீரியா கிருமிகள் உடலுக்குள் நுழைந்த பிறகு, ஏழு முதல் பன்னிரெண்டு நாட்களுக்குள் எலிக்காய்ச்சல் நோயின் அறிகுறிகள் தோன்றுகின்றன. முதல் வாரத்தில் குளிர்க்காய்ச்சல், நடுக்கம், தலைவலி, உடல் வலி, உடல் தளர்வு, கண்கள் சிவந்துபோதல், கண் கூச்சம், வயிற்று வலி, வாந்தி, உடலில் தடிப்புகள் போன்ற பல அறிகுறிகள் காணப்படுகின்றன. இதற்குப் பிறகு, சுமார் ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை காய்ச்சல் இல்லாமல் இருக்கும். இரண்டாவது கட்டத்தில், கிருமிகள் பல்வேறு திசுக்களையும் உடல் உறுப்புகளையும் தாக்குவதால் பாதிப்பு ஏற்படுகிறது, குறிப்பாக கல்லீரல் மற்றும் சிறுநீரகம் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. எலிக்காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் இருப்பதாக சந்தேகம் எழுந்தால், உடனே அருகே உள்ள மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும் என கேரள சுகாதாரத்துறையினர் கூறியுள்ளனர்.
