பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. மத்திய அரசு உயர்த்தியுள்ள கூடுதல் கலால் வரி விதிப்பு இன்று நள்ளிரவு ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ள நிலையில் கலால் வரி உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் கலால் வரி உயர்த்தப்பட்டாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்காது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய பெட்ரோலியம் மற்றும் கேஸ் அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில், ‘கலால் வரி உயர்த்தப்பட்டபோதிலும், எண்ணெய் நிறுவனங்கள் சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்காது என்று தெரிவித்துள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இதுபற்றி பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் அளித்த பேட்டியில், கலால் வரி உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளும் என்றும் சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலையை ரூ. 50 உயர்த்தி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த விலை உயர்வு உஜ்வாலா திட்டத்தில் பயன் பெறுபவர்கள் மற்றும் பயன் பெறாதவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும் என்றும், இந்த விலை உயர்வு நாளை காலை முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவித்துள்ளார். இந்த விலை உயர்வின் மூலம், ரூ.818.50 ஆக இருந்த சிலிண்டர் விலை ரூ.868.50 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

