தமிழ்நாடு சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தமிழ்நாடு கண்ணாடி இலை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) மூலம் 11626 கிராம பஞ்சாயத்துகளை இணைக்கும் பணிகள் 53 ஆயிரத்து 334 கிலோ மீட்டர் தொலைவிற்கு 92 சதவீதம் நிறைவடைந்ததாக தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் மீதமுள்ள பணிகள் முடிந்து, வீடுகளுக்கு மாதம் 200 ரூபாய் கட்டணத்தில் 100 MBPS வேகத்தில் இணையதள சேவையை வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், 50 புதிய ஆதார் பதிவு மையங்கள் மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்படவுள்ளன. தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு மொழி தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படும். கடந்த ஆண்டு, இ-சேவை மையத்தின் மூலம் 1.2 கோடி மக்கள் பயனடைந்தனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 25,000 இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இ-சேவை, பிற துறைகளின் சேவைகளை வாட்ஸ்-அப் செயலியில் ஒருங்கிணைத்து வழங்கும் திட்டம் உருவாக்கப்படும், எனவும் பி.டி.ஆ ர் அறிவித்துள்ளார்.

