ஆவினுக்கு பால் வழங்கப்போவதில்லை, திட்டமிட்டப்படி போராட்டம் தொடரும் என பால் உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு. பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 50ஆயிரம் முதல் ஒரு லட்சம் லிட்டர் வரை பால் விநியோகம் பாதிக்கம் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பால் வளத்துறை அமைச்சருடன் பால் உற்பத்தியாளர் சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், திட்டமிட்டப்படி வெள்ளிக்கிழமை முதல் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆவின் மூலமாக கொள்முதல் செய்யப்படும் ஒரு லிட்டர் பாலுக்கு 7 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் வலியுறுத்தியது. பால் கொள்முதல் விலை உயர்த்தாத பட்சத்தில் வெள்ளிக்கிழமை முதல் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பால் கொள்முதல் விலை உயர்வு குறித்த கோரிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவிப்பதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்திருந்தார்.