2020ஆம் தொடக்கத்தில் கோவிட் -19 தொற்று தீவிரமடைந்து உலக நாடுகள் அனைத்திற்கும் பரவி உலக சுகாதார அமைப்பு அதை பேன்டமிக் என அறிவித்தது. பின்னர் உலகம் முழுக்க லாக்டவுன் அறிவிக்கப்பட்டு ஒட்டுமொத்த உலக நாடுளும் முடங்கிப்போயின. 2021ஆம் ஆண்டு இறுதியில் சற்று குறைந்த கொரோனா தொற்றால் உலகம் மெல்ல மீண்டு வருகிறது. இதற்கிடையில் குரங்கம்மை எனும் புதுவகை நோய் உலகை அச்சுறுத்தி வருகின்றது.
ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் தாக்கப்பட்ட இந்த குரங்கம்மை மெல்ல பிற நாடுளுக்கும் பரவத்தொடங்கியது. இதனால் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. குரங்கம்மையும் வேகமாக பரவும் தன்மை கொண்டது, உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என கூறியது.
2022, மே மாதம் இங்கிலாந்து நாட்டில் முதல் குரங்கம்மை தொற்று கண்டறியப் பட்டது. அதன் பின் அதன் பரவல் மெல்ல மெல்ல பிற நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. பின்னர் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, பிரான்ல், ஜெர்மனி நாடுகளிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. ஜூலை மாத இறுதி வரையிலான கணக்கெடுப்பில் அமெரிக்காவில் தான் அதிக பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளன. மொத்தம் 3,600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நியூயார்க் நகரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவ அவசரநிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.
குரங்கம்மை நோயின் அறிகுறிகளென சொறி, தீராத அரிப்பு, காய்ச்சல், தலைவலி, உடல்வலி இவையெல்லாம் இருக்கும். குறிப்பாக கொப்பளங்களில் இருந்து வெளிப்படும் நீரானது மற்றவர்கள் தொடர்பில் இருப்பின் குரங்கம்மை பாதிப்பு அவர்களுக்கும் ஏற்படும். இதனால் குரங்கம்மை பாதிப்பு இருப்பவர்களுடனோ, எதாவது அறிகுறிகள் தென்பட்டாலோ அவர்களோடு தொடர்பு வைத்துக்கொள்ளகூடாதென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஜூலை 2வது வாரத்தில் இந்தியாவிலும் முதல் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது. அரபு நாட்டில் இருந்து கேரளா வந்த ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுவரை 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இதனால் பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்திய சுகாதார அமைப்பு, எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு, உலக சுகாதார அமைப்பின் உறுப்பினர்கள் தலைநகர் டில்லியில் கூட ஆலோசித்தனர்.