ஹோர்முஸ் நீரிணை அருகே துப்பாக்கிச் சூட்டில் சேதமடைந்ததாக கூறப்பட்ட எம்டி சன்மார் ஹெரால்ட் (MT Sanmar Herald) கச்சா எண்ணெய் கப்பல், ஒடிசாவின் பாராதீப் துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்தது.இந்த கப்பலில் சுமார் 20 லட்சம் பேரல் ஈராக் கச்சா எண்ணெய் ஏற்றப்பட்டிருந்தது. தாக்குதலால் கப்பலின் முன்பகுதி மற்றும் கண்ணாடிகளில் சிறிய சேதம் ஏற்பட்டாலும், கப்பல் பாதுகாப்பாக தனது பயணத்தை தொடர்ந்தது.சில வாரங்களுக்கு முன்பு, ஈரானிய கடல் பகுதிக்கு அருகே சென்றபோது இந்த கப்பல் துப்பாக்கிச் சூட்டை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த தாக்குதலை ஈரான் ராணுவத்தினர் நடத்தியதாக கூறப்படுகிறது.தாக்குதலுக்குப் பிறகு கப்பல் மாற்றுப் பாதையில் பயணித்தது. இந்திய கடற்படையின் தொடர்ந்து வழங்கிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு உதவியுடன், கப்பல் எந்த பெரிய ஆபத்தும் இன்றி இந்தியாவை வந்தடைந்தது.பாராதீப் துறைமுகத்தை அடைந்ததும், SPM-I மிதவை இறங்குதளம் மூலம் கச்சா எண்ணெய் இறக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்திய கடற்படையின் ஒத்துழைப்பால் இந்த பயணம் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

