நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் 2022 ஆம் ஆண்டின் தீபாவளிக் கொண்டாட்டம் அக்டோபர் 30 ஆம் தேதி, ஸ்கில்மேன் நியூஜெர்சியில் உள்ள மான்ட்கோமரி உயர் நடுநிலைப் பள்ளியில் இனிதே நடந்தேறியது. சரவெடி போல் கலைநிகழ்ச்சிகள்,சிறப்பு வாழையிலை விருந்து, பிரபல சூப்பர் சிங்கர் பாடகர்களின் இசை நிகழ்ச்சி என்று இந்த தீபாவளித் திருவிழா களைகட்டியது! தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து வரவேற்புரை வழங்கி கொண்டாட்டங்களை தொடங்கி வைத்தனர் தலைவர் திரு. பாலமுரளி கோதண்டராமன் மற்றும் துணைத்தலைவர் திருமதி. கீதா பொன்முடி அவர்கள். இதைத் தெடர்ந்து நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் திறமையான நடனக் கலைஞர்களும், குழந்தைகளும் ஆர்வத்துடன் பங்கேற்று பார்வையாளர்களை மகிழ்வித்தனர். இதில் முத்தாய்ப்பாய் “பொன்னி நதி பாக்கனுமே”என்ற பொன்னியின் செல்வன் திரைப்படப் பாடலுக்கு தமிழ்ச்சங்க செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆடிய நடனம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது!
இதைத் தொடர்ந்து சிறப்பு வாழையிலை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அஞ்சப்பர் உணவகத்தின் அறுசுவை சைவ விருந்தை நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் ரசித்து ருசித்தார்கள். தமிழ்ச்சங்க செயற்குழு உறுப்பினர்களும், தன்னார்வலர்களும் பந்தி பரிமாறி ஒரு அருமையான கல்யாண விருந்து உண்ட அனுபவத்தை நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு கொடுத்தார்கள்!
தொடர்ந்து நடந்த திருவாளர்/திருமதி நியூஜெர்சி (Mr and Mrs New Jersey) என்ற போட்டி, தம்பதிகளின் அழகான வாழ்க்கைப் பயணத்தைக் கொண்டாடும் விதமாக அமைந்தது. நியூஜெர்சியின் சிறந்த தம்பதிகளுக்கான இந்தப் போட்டி பார்வையாளர்களின் ரசனைக்கு விருந்தாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கல்யாண் கோல்டன் ரிதம்ஸின் இசைநிகழ்ச்சியில் விஜய் டிவி புகழ் சூப்பர் சிங்கர் பாடகர்கள் ஆனந்த் அரவிந்தாக்ஷன், ஃபரிதா இவர்களுடன் ஜீ டிவி புகழ் பாடகி வர்ஷா மற்றும் பாடகர்கள் சாம் கீர்த்தன் , கல்யாண் மற்றும் பவித்ரா ஆகியோருடன் திறமையான இசைக்கலைஞர்கள் இணைந்து அட்டகாசமான இசை நிகழ்ச்சியை வழங்கினர். பாடகர்களின் துள்ளல் இசைக்கு உற்சாக நடனமாடி மகிழ்ந்தனர் பார்வையாளர்கள்!
ஆடைகள், ஆபரணங்கள், பலகாரங்கள் என பலதரப்பட்ட பொருட்களின் விற்பனையும் இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்றது.
கொரோனா பேரிடர் காலத்திற்குப் பின் மிகப் பிரம்மாண்டமாய் நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் தற்போதைய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் திரு. பாலமுரளி கோதண்டராமன்-தலைவர், திருமதி.கீதா பொன்முடி-துணைத் தலைவர், திருமதி.சுசித்ரா ஶ்ரீனிவாஸ்- பொருளாளர், திருமதி.அனுராதா சேஷாத்ரி-இணைப் பொருளாளர், திருமதி.கவிதா சுந்தர்- தகவல் தொடர்பு இயக்குனர் ஆகியோர் தலைமையில் நடத்தப்பட்ட இந்தத் தீபாவளிக் கொண்டாட்டம், அயலகம் வாழும் தமிழ் மக்களுக்கு தாய்த்தமிழ் மண்ணில் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடிய மனநிறைவைத் தந்த ஒரு நிகழ்ச்சியாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.
-மேனகா நரேஷ்