ஒன்றிய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், ஓய்வூதிய திட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஒன்றிய நிதி அமைச்சகத்தின் நிதிசார் சேவைகள் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 01.04.2025 முதல் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள ஒன்றிய அரசு ஊழியர்களை ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சேர்க்க ஒரு முறை மட்டுமே விருப்பத் தேர்வை வழங்குகிறது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு மேலும் உத்வேகம் அளிக்கும் முயற்சியாக, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் வரிச் சலுகைகள், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கும் பொருந்தும் என்று அரசு முடிவு செய்துள்ளது. இந்த விதிகள் தற்போதுள்ள தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான நிலையை உறுதி செய்வதுடன், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் ஊழியர்களுக்கு வரி சலுகைகளை வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
