நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றில் சிக்கி இருவர் உயிரிழந்த நிலையில், 25 பேர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தின் கிழக்கு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையை தொடர்ந்து சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.நேபாளாத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் அவ்வப்போது ஏற்படுவது வழக்கம் தான் என்றாலும், நிலச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளார். அவரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இதுதவிர, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற பாதிப்புகளில் சிக்கி இதுவரை 25 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. மீட்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.