கோயம்புத்தூர் சிலிண்டர் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக கூறி மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில், 28 வயது மதிக்கத்தக்க ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையை அடுத்து, தற்கொலைப் படை தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டது. மேலும், மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெடிபொருட்கள் தயாரிக்கத் தேவைப்படும் மூலப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு , அவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை ( என்.ஐ.ஏ.)அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், தற்போது இந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் அபு அனிபா, சரண் மாரியப்பன், பாவாஸ் ரகுமான் ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. இதனிடையே, இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.