மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு, விமானப் பயணிகளுக்கு முக்கிய நிவாரணத்தை அறிவித்துள்ளது. அதன்படி, விமானங்களில் உள்ள 60 சதவீத இருக்கைகளை தேர்வு செய்ய பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.உலகளவில் உள்நாட்டு விமானப் பயணிகளை கையாளும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. தினமும் சுமார் 5 லட்சம் பயணிகளை இந்திய விமான நிலையங்கள் கையாளுகின்றன. தற்போது, ஜன்னல் இருக்கைகள் அல்லது முன்பக்க இருக்கைகள் போன்ற விருப்பமான இருக்கைகளை தேர்வு செய்ய விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றன.இந்த நிலையை மாற்றும் வகையில், இனிமேல் பெரும்பாலான இருக்கைகளுக்கு (60%) எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் பயணிகள் தேர்வு செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.மேலும், ஒரே முன்பதிவில் பயணச்சீட்டை பதிவு செய்யும் பயணிகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் அருகருகே இருக்கைகள் ஒதுக்க வேண்டும் என்றும் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதோடு, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இசைக் கருவிகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. செல்லப்பிராணிகளை விமானத்தில் கொண்டு செல்வதற்கான தெளிவான விதிமுறைகளையும் நிறுவனங்கள் வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், விமான நிறுவனங்களின் இணையதளம், மொபைல் செயலிகள், முன்பதிவு மையங்கள் மற்றும் விமான நிலைய கவுண்டர்களில் பயணிகளின் உரிமைகள் உள்ளூர் மொழிகளில் தெளிவாக காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

