2022ம் ஆண்டின் மருவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

உலகம் ஐரோப்பா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் மருத்துவம் வரும் நிகழ்ச்சிகள்

2022-ம் ஆண்டுக்கான மருத்துவத் துறைக்கான நோபல் பரிசுக்கு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்வாந்தே பாபோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கியவர்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவர்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசை நார்வே வழங்குகிறது. பிற பரிசுகளை ஸ்வீடன் வழங்குகிறது. ஒரு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.7.33 கோடி ரொக்கம் ஆகியவை நோபல் பரிசாக வழங்கப்படுகின்றன.
2022-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு இன்று தொடங்கியுள்ளது. அதன்படி, முதல் பரிசாக மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசு, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்வாந்தே பாபோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அழிந்துபோன மனித இனங்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட இருக்கிறது என்று நோபல் குழு அறிவித்துள்ளது.
ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் 1955-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி பிறந்தவரான ஸ்வாந்தே பாபோ, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள இரண்டு முக்கிய நிறுவனங்களுக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.
மருத்துவத் துறையில் சாதனை படைத்தவர்களுக்காக 1901 முதல் 2021 வரை 112 நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 12 பரிசுகள் மட்டுமே பெண்கள் பெற்றுள்ளனர்.
2022-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தொடர்ந்து வெளியாக இருக்கின்றன. இயற்பியலுக்கான பரிசு நாளையும், வேதியியலுக்கான பரிசு புதன் கிழமையும், இலக்கியத்துக்கான பரிசு வியாழக்கிழமையும், அமைதிக்கான பரிசு வெள்ளிக்கிழமையும் அறிவிக்கப்பட இருக்கின்றன. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வரும் திங்கள்கிழமை அறிவிக்கப்பட இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.