பிளாஸ்டிக் சர்ஜரி என்பது உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா? யாரெல்லாம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளலாம்? பிளாஸ்டிக் சர்ஜரியை மறுசீரமைப்பு சிகிச்சை, ஒப்பனை அறுவைசிகிச்சை, கை அறுவைசிகிச்சை என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். `மறுசீரமைப்பு அறுவைசிகிச்சை’ என்பது பிறவியிலேயே இருக்கும் குறைபாடுகளான அண்ணப் பிளவுகளை சரிசெய்தல், காது மடல்களை சரிசெய்தல் போன்றவற்றுக்காக மேற்கொள்ளப்படுவது.
இப்போது பெரும்பாலும் அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள மக்கள் விருப்பம் காட்டுகிறார்கள். இது முழுவதும் ஆபத்தானது அல்ல. மற்ற சிகிச்சை முறையில் இருப்பது போலவே இதிலும், சில ஆபத்துகள் நிகழலாம்.
அழகு சார்ந்த அறுவை சிகிச்சைக்களுக்காக வருபவர்களிடம், முதலில் அவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவார்கள். இது உடனடியாகச் செய்துகொள்ள வேண்டிய சிகிச்சை அல்ல. எனவே, அவசரம் காட்டக்கூடாது. வெவ்வேறு மருத்துவர்களிடம் ஆலோசனைகள் கேட்கலாம். அதன்பின் பொறுமையாக முடிவெடுக்க வேண்டும்.
அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டியது அவசியம்தானா என்பதைத் தெளிவாக முடிவெடுத்த பின்னர், எந்த மருத்துவமனையில் கட்டணம் குறைவு என்பதைப் பார்க்காமல், எந்த மருத்துவரிடம் அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போகிறீர்கள்… அவருக்கு முன் அனுபவங்கள் உண்டா… எந்த மருத்துவமனையில் வைத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது… சிகிச்சையின்போது ஏதேனும் பாதிப்பு என்றால் அவசர சிகிச்சைக்குப் போதுமான வசதிகள் அந்த மருத்துவமனையில் இருக்கின்றனவா என்பதை ஒன்றுக்கு பல முறை கேட்டு விசாரித்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு இருக்கும் ஆரோக்கியம் சார்ந்த மற்ற விஷயங்களையும் மருத்துவரிடம் வெளிப்படையாகப் பேசி விடுவது நல்லது. அறுவை சிகிச்சை முடித்து வந்த பிறகும்கூட, சிலருக்கு ஒவ்வாமைகள் ஏற்படலாம். அப்படி ஏற்பட்டால் உடனே மருத்துவர்களை அணுகுவது நல்லது. இவற்றில் கவனமாக இருந்தால் ஆபத்துகளைத் தவிர்க்கலாம்”