ஊட்டியில் நடைபெறும் பிரபல ரோஜா கண்காட்சியை காண 2வது நாளாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

இந்தியா இயற்க்கை சிறப்பு சுற்றுச் சூழல் சுற்றுலா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பொழுதுபோக்கு முதன்மை செய்தி

ஊட்டி ரோஜா பூங்காவில் நடைபெற்று வரும் 21வது ரோஜா கண்காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. கண்காட்சியின் இரண்டாவது நாளிலும் ஏராளமானோர் பூங்காவை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கோடை விழாக்கள் நடத்தப்படும். இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் காரணமாக விழா தேதிகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. தேர்தல் முடிந்ததையடுத்து ரோஜா, மலர் மற்றும் பழக்கண்காட்சிகளை நடத்த அரசு முடிவு செய்தது.அதன்படி, 21வது ரோஜா கண்காட்சி ஊட்டி ரோஜா பூங்காவில் தொடங்கியுள்ளது. “பறவைகளின் சொர்க்கம்” என்ற கருப்பொருளில் சுமார் 2 லட்சம் மலர்களால் பல்வேறு பறவைகளின் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 70 ஆயிரம் மலர்களால் செய்யப்பட்ட அன்னப்பறவை அலங்காரம் பார்வையாளர்களை கவர்கிறது.மேலும் கழுகு, தேன்சிட்டு, வரித்தலை வாத்து, தூக்கணாங்குருவி கூடு உள்ளிட்ட பல பறவைகளின் வடிவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்காக ஆங்கிரி பேர்ட் மற்றும் டிவிட்டி பேர்ட் வடிவங்களும் வைக்கப்பட்டுள்ளன. பூங்காவின் பல இடங்களில் செல்பி எடுக்க சிறப்பு ஸ்பாட்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இந்த கண்காட்சி கடந்த ஆண்டில் 3 நாட்கள் மட்டுமே நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதனால் அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ரோஜா செடி வளர்ப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு, வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *