IPL 2025: ஐபிஎல் தொடரில் ஹிமாச்சல் மாநிலம் தரம்சாலா மைதானத்தில் தற்போது நடைபெற்ற பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
IPL 2025: ஐபிஎல் தொடரில் ஹிமாச்சல் மாநிலம் தரம்சாலா மைதானத்தில் தற்போது நடைபெற்ற பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், போட்டி நிறுத்தப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
திடீரென மூன்று லைட் டவர்களில், இரண்டு டவர் அணைந்ததால் வெளிச்சமின்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. அதன்பின், பார்வையாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறும்படி அங்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போட்டியும் முழுமையாக ரத்தான நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக போட்டி நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரம்சாலா மைதானம் பாகிஸ்தான் எல்லையில் இருந்து ஓரளவு அருகாமையில் இருக்கிறது. இன்றிரவு போட்டி நடைபெற்று வந்த அதே நேரத்தில் பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு பகுதிகளில் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் தொடுக்க முயற்சி மேற்கொண்டது. இந்தியா அவை அனைத்தையும் முறியடித்தது. இருப்பினும் மக்களின் பாதுகாப்பு காரணத்தை கொண்ட போட்டி நிறுத்தப்பட்டிருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.
ஏற்கெனவே, வரும் மே 11ஆம் தேதி தரம்சாலாவில் நடைபெற இருந்த மும்பை – பஞ்சாப் போட்டியும் அகமதாபாத் நகருக்கு மாற்றப்பட்டது. இன்றைய போட்டியும் ரத்தாகி உள்ளதால் ஐபிஎல் தொடரின் மீதம் உள்ள போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் என்றும் இதுகுறித்து பிசிசிஐ தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் தணிந்த பின்னர் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படலாம் என தெரிகிறது. இன்னும் 12 லீக் போட்டிகள் மற்றும் 4 பிளே ஆப் போட்டிகள் என மொத்தம் 16 போட்டிகள் உள்ளன.
மேலும், இன்று தரம்சாலாவில் இருந்து டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியினர், வீரர்களை பாதுகாப்பாக அங்கிருந்த வெளியேற்ற வந்தே பாரத் ரயில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

