நரேந்திர மோடியை பிரதமராக்க தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டத்தில் ஜெ.பி.நட்டா, ராஜ்நாத்சிங், அமித் ஷா, சந்திரபாபு, நிதிஷ் உட்பட 21 தலைவர்கள் பங்கேற்றனர். மேலும் வெளியான அறிக்கையில்; “நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மக்கள் நலக் கொள்கைகளால் கடந்த 10 ஆண்டுகளில் நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்து வருவதை இந்தியாவின் 140 கோடி நாட்டு மக்கள் கண்டுள்ளனர்.
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கிட்டத்தட்ட 6 தசாப்தங்களுக்குப் பிறகு, இந்திய மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக அறுதிப் பெரும்பான்மையுடன் வலுவான தலைமையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். 2024 லோக்சபா தேர்தலில் மதிப்பிற்குரிய நரேந்திர மோடியின் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒற்றுமையாகப் போராடி வெற்றி பெற்றதில் நாம் அனைவரும் பெருமிதம் கொள்கிறோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர் நரேந்திர மோடியை நாங்கள் அனைவரும் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்துள்ளோம். மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் சுரண்டப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட இந்தியாவின் குடிமக்களுக்கு சேவை செய்ய உறுதி பூண்டுள்ளது.
இந்தியாவின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதன் மூலம் இந்திய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், நாட்டின் அனைத்துத் துறை வளர்ச்சிக்காகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடர்ந்து பணியாற்றும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.