கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தின் தலைவரான போப் பிரான்சிஸ் 88வது வயதில் காலமானார். அவரது மறைவை வாடிகன் தேவாலய நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போப் பிரான்சிஸின் மறைவு உலகளாவிய கத்தோலிக்க கிறிஸ்தவர்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சுவாச சிக்கலால் கடந்த மாதம் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாச பாதையில் தொற்று ஏற்பட்டது, இதனால் நிமோனியா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனையில் 5 வாரங்களுக்குமேலாக சிகிச்சையில் இருந்து போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறிய நிலையில் டிஜ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில், டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்த போப் பிரான்சிஸ் இன்று காலமானார். காலை 7.35 மணிக்கு போப் பிரான்சிஸ் உயிர் பிரிந்ததாக வாடிகன் தேவாலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.வாடிகனில், நேற்று நடந்த ஈஸ்டர் ஞாயிறு வழிபாட்டில் கூட்டத்தில் போப் பிரான்சிஸ் உரையாற்றி மக்களை சந்தித்த நிலையில் இன்று உயிரிழந்தது வட்டிகன் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. போப் பிரான்சிஸ், இயற்பெயர் ஜார்ஜ் பெர்கோகிலோ, கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தின் தலைவராக அமர்ந்த முதல் லத்தீன் அமெரிக்கர் என்ற பெருமையை உடையவர். 2013-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி, அவர் 266வது போப்பாக தேர்வு செய்யப்பட்டார். உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்களுக்கு போப் பிரான்சிஸ் மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

