பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றாக, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஆசிய கிரிக்கெட் அணிகள், ஆசிய கிரிக்கெட் வாரியத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. தற்போது, பாகிஸ்தான் அமைச்சர் மோசின் நக்வி தலைவராக உள்ள நிலையில், இந்தியா இந்த வாரியத்தின் நடத்தும் தொடர்களில் இருந்து விலக திட்டமிட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, பிசிசிஐ இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அடுத்த மாதம் இலங்கையில் எமார்ஜிங் மகளிர் ஆசிய கோப்பை நடைபெறவுள்ளது, மேலும் செப்டம்பரில் ஆடவர் ஆசிய கோப்பை நடைபெறும். முதற்கட்டமாக, இவ்விரு தொடர்களில் இருந்து இந்தியா விலகுவதாக பிசிசிஐ ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும், பிசிசிஐ மற்றும் ஏசிசி இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடவில்லை. இதற்கு முன்பு, காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர், இதற்கான பதிலாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

