உத்திரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சாதுக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக திரண்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புனித நீராடினார். இந்நிலையில், பிரதமர் மோடி பிப்ரவரி 5ம் தேதி பிரயாக்ராஜ் செல்ல திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் டெல்லியிலிருந்து விமான படைக்குச் சொந்தமான விமானத்தில் காலை 10.45 மணிக்கு பிரயாக்ராஜ் நோக்கி புறப்படுகிறார். பின்னர், படகின் மூலம் ஏரியல் கோட் பகுதிக்கு செல்லும் பிரதமர், காலை 11 மணி முதல் 11.30 மணிக்குள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவார் என கூறப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் நாளைச் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் மோடி கும்ப மேளாவில் புனித நீராட உள்ளார். பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. புனித நீராடிய பிறகு, பிரதமர் மோடி பிற்பகல் 12.30 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார் என கூறப்பட்டுள்ளது.

