இங்கிலாந்தை சேர்ந்த ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி, பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த ஜேம் ஸ்காட் என்பவர், ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை செலுத்திய பிறகு தனக்கு மூளையில் ரத்தம் உறைந்து, அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்று குற்றம்சாட்டினார்.
இதற்கு மன்னிப்பும், உரிய இழப்பீடும் வழங்கக் கோரி ஸ்காட் தரப்பில் இங்கிலாந்து நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
கடந்தாண்டு மே மாதம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, தடுப்பூசியால் பொதுவாக ரத்தம் உறையாது என்று ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் வாதிட்டது. இந்நிலையில், ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் தற்போது தாக்கல் செய்துள்ள அறிக்கையில், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அரிதிலும் அரிதாக ரத்தம் உறைய வாய்ப்பு இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளது. இங்கிலாந்தில் மட்டும் ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் தயாரித்த தடுப்பூசியால் பாதிக்கப்பட்டு இருப்பதாக 51 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்தியாவின் சீரம் நிறுவனம், ஆஸ்ட்ரா ஜெனிகாவுடன் இணைந்து தயாரித்த கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பலர் செலுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.