போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதலை ரஷ்ய அதிபர் புதின் வழங்கியுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க அதிபராக டிரம்ப் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் தொடர்பாக முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான தடையை ஜோ பைடன் நீக்கியுள்ளார். இதன் மூலம், அமெரிக்காவின் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அமெரிக்காவின் முடிவு உக்ரைனுக்கு எதிரான போரை மேலும் தீவிரமாக்கும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் அனுமதியைத் தொடர்ந்து, அணு ஆயுதம் தொடர்பான ஒப்புதலை ரஷ்ய அதிபர் புதின் புதுப்பித்துள்ளார்.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அணுசக்தி தொடர்பான புதிய கோட்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான ஆணையில் அவர் கையெழுத்திட்டுள்ளார். அணுசக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த அனுமதிக்கும் ஆணையில் புதின் கையொப்பமிட்டுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் ஆயிரம் நாள்களை கடந்த பிறகு, அவர் இந்த கையொப்பத்தை வழங்கியுள்ளார்.இந்நிலையில், தற்போது உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இந்த அறிவிப்பு காரணமாக, ரஷ்யா – உக்ரைன் போர் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது.

