கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனிடையே கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை ஆகிய 4 மாவட்டங்களுக்கு நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஒரு குழுவுக்கு 30 வீரர்கள் என்ற அடிப்படையில் 300 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள் 4 மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர்.
அந்த வகையில், நெல்லையில் 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்களும், குமரியில் 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்களும், நீலகிரியில் 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்களும், கோவையில் 30 வீரர்கள் கொண்ட ஒரு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். அனைத்து மீட்பு உபகரணங்களுடன் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக மாநில பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.