கத்தார் உலகப் கோப்பை கால்பந்து போட்டியில் 2 -1 என்ற கணக்கில் அர்ஜெண்டினா அணியை சவுதி அரேபியா வென்றதைத் தொடர்ந்து பொது விடுமுறை அளித்து சவுதி அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விடுமுறையில் வெற்றிக் கொண்டாட்டத்தில் சவுதி அரேபிய மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று ‘சி’ பிரிவில் உள்ள அர்ஜென்டினா – சவுதி அரேபியா அணிகள் மோதின. தோகாவில் 80 ஆயிரம் அமரக்கூடிய லுசைல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 10-வது நிமிடத்தில் பெனால்டி ஏரியாவில் வைத்து அர்ஜென்டினாவின் லியாண்ட்ரோ பரேட்ஸை, ஃபவுல் செய்தார் சவுதி அரேபியாவின் சவுத் அப்துல்ஹமீத். இதனால் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை லயோனல் மெஸ்ஸி கோலாக மாற்ற அர்ஜென்டினா 1-0 என முன்னிலை வகித்தது.
எனினும் சவுதி வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் இரண்டாவது பாதியில் 2 கோல்கள் அடித்து சவுதி அரேபியா முன்னிலை வகித்து அர்ஜெண்டினாவை வெற்றி கொண்டது. உலகக் கோப்பையில் சிறந்த அணியாக கருதப்படும் அர்ஜெண்டினாவை சவுதி வெற்றி கொண்டது சவுதி மக்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இன்று பொது விடுமுறையை சவுதி அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மக்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.