நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான கூலியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. முக்கிய கதாபாத்திரங்களில் சௌபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இதற்கான மேக்கிங் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது முந்தைய படங்களான மாஸ்டர், விக்ரம், லியோ ஆகியவற்றின் படப்பிடிப்புகளை திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். அதேப்போல், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது முடிவடைந்துள்ளது. இப்படத்தை தொடர்ந்து, கைதி -2 படத்தின் பணிகள் லோகேஷ் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரம் அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

